ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏவிடம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் அளித்த கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் இருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்று 30 ஆயிரத்திற்கும் அதிகமாகி வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் மே 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி, ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஶ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நேரடியாக கள ஆய்வு செய்து கோரணா நோய்த் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகிறார். கொரோனா தடுப்பூசி போடும் முகாம்களையும் தொடங்கி வைத்து தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், மே 16ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று தடுக்கும் பணிகள் குறித்து ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களின் நீண்டகால கோரிக்கையான அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்தார் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். இதற்கு பொதுமக்களும் வியாபாரிகள் சங்கத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் ஶ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வின் போது செவிலியர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்கு வந்து செல்வதில் சிரமம் உள்ளதாகவும் அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கும் படியும் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இக் கோரிக்கையின்படி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளிடம் பேசிய ஊர்வசி அமிர்தராஜ் நோய்த்தொற்று தடுப்பதற்கான பணிகளில் தன்னலம் பாராது பணியாற்றும் செவிலியர்கள் கோரிக்கையின்படி உடனடியாக அரசு பேருந்து ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதன்படி, தூத்துக்குடியில் இருந்து ஶ்ரீவைகுண்டத்திற்கு காலை 8.20 மணிக்கும் மாலை 6 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் செவிலியர்கள் மட்டுமின்றி தூத்துக்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வந்து செல்லும் அரசு பணியாளர்களும் முன்கள பணியாளர்களும் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.

