தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கோவையில் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று காலை தனி விமானம் மூலம் கோவை வந்தார். கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அவர் சாமி கும்பிட்டார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து பா.ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினரின் இருசக்கர வாகன ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இருசக்கர வாகன ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு, கோவை ராஜவீதி தேர்நிலை திடலை அடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தமிழகம் சார்பில் ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்காளம், அசாம், தமிழகத்தில் வெற்றிபெறுவோம்.
தமிழகத்தில் நமது கூட்டணி புதிய விடியலை நோக்கி செல்கிறது. தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ள பிரதமர் மோடியை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் பல திட்டங்களை கடந்த 6 ஆண்டுகளில் வழங்கியுள்ளார். இலவச எரிவாயு இணைப்பு, இலவச வீடு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்களுக்காக தமிழகத்திற்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், 54 லட்சம் கழிப்பறைகளை இலவசமாக கட்டி கொடுத்துள்ளது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விவசாயிகள் முன்னேற்றத்திற்காக 6 ஆயிரம் ரூபாயை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை பிரதமர் அறிவித்தார். தமிழகத்தில் உள்கட்டமைப்புக்காக மெட்ரோ ரெயில் திட்டம், ஐ.ஐ.எம். போன்ற இந்தியாவின் புகழ் பெற்ற பெரிய கல்வி நிறுவனங்கள் வர உள்ளது. பாகுபாடில்லாமல் மக்களுக்கு திட்டங்கள் சென்றடைய வேண்டும். வரும் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் இன்னும் அதிக நிதி கிடைக்கும். ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் போன்ற திட்டங்கள் கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டங்கள் தடைபடும்.
தமிழகம் பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மண். பெண்களுக்கு மரியாதை செலுத்தும் மண். பெண் குழந்தைகளுக்கும், மகளிருக்கான முன்னேற்றத்தை நம் கூட்டணியால் மட்டும் தான் தர முடியும். ஆனால் தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவர்கள் பெண்களுக்கு எதிரான நபர்கள். பெண்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க. கூட்டணியை ஆட்சிக்கு வர விடக்கூடாது.
தி.மு.க. கூட்டணி ஊழல் கூட்டணியாகும். அவர்களுக்கு ஜனநாயகம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கவலை கிடையாது. காமன் வெல்த் விளையாட்டு நடத்துவதில் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், 2-ஜி ஊழல் என எண்ணற்ற ஊழல்கள் அவர்களது ஆட்சியில் நடைபெற்றன. இவர்களுக்கு ஊழல் செய்வது தான் நோக்கம். அவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது வாக்காளர்களாகிய உங்கள் கடமை. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

