மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று (ஜூலை.6) காலை மேலமாரட் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிற்றுந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வனிதா அவர்கள் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் பிரேம் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிற்றுந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சிற்றுந்துகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசனை கூறப்பட்டது. கூட்டத்தின் முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றுந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், சிற்றுந்து உரிமையாளர்கள் ஆகியோர் விபத்தில்லா மதுரையை உருவாக்கிட உறுதி மொழி எடுத்தனர். இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, கணேஷ் ராம், செந்தில் குமார், செந்தில் சுரேஷ், பூர்ண கிருஷ்ணன், பஞ்சவர்ணம், சோபனா, பால் தாய் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சு.இரத்தினவேல்.
நிருபர். மதுரை.
