தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதும் பெண்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றும் வகையில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டமான விடியல் பயணத் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டு பணிகளை துவங்கிய முதல்வர் ஸ்டாலின் 4½ ஆண்டு காலம் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் பாரபட்சமின்றி தொகுதிக்கேற்றாற் போல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து முடிவுற்றதும் திறந்து வைப்பதும் தொடங்கி வைப்பதும் தன்னுடைய கடமையாக கருதி ஒன்றிய அரசின் பல்வேறு நிதி வழங்காத குறைபாடுகளுக்கிடையிலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கும் என்ற அடிப்படையில் அவரோடு இணைந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பல்வேறு வகையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேரடி பார்வையில் நடைபெற்று நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும், சில பணிகள் நிறைவேற்ற வேண்டும் என்று வாரந்தோறும் குறைதீர்ப்பு மனுக்கள் வழங்கும் முகாமில் பொதுமக்கள் வரிசையில் நின்று கலெக்டரிடம் மனு அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில்: எம்.ஜி.ஆர் தொடங்கி வழி நடத்திய இந்த தமிழகத்தில் ஜெயலலிதா என்ற ஆளுமை எல்லோரையும் திரும்பி பார்க்கும் வகையில் செய்த பணிகளின் வழியில் எடப்பாடியார் பணியாற்றி வருகிறார். 4½ ஆண்டு காலம் ஆட்சியில் தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, குழந்தை தொட்டில் திட்டம், மக்கள் கூடும் பகுதியில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை இப்படி ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வழங்கிய திட்டங்கள் பல முடங்கி போய் கிடக்கின்றன. இதை மீண்டும் நடைமுறைப்படுத்த எடப்பாடியார் ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் பொற்காலமாக இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடக துறையினருக்கு அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட வீட்டு மனைக்கான இடத்தை இன்று வரை முறைப்படுத்தி தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் எல்லா தூண்களையும் தூக்கிப் பிடிக்கிறது. தற்போது வரை ஆளுங்கட்சி மட்டுமின்றி எல்லோருக்கும் சேர்த்து தான் பணியாற்றுகிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் ஆட்சி வழங்குகிறோம் என்று கூறுபவர்கள் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மட்டும் வேறு நாட்டிலா வாழ்கிறார்கள். உடனடியாக அவர்களுக்குரிய உரிமையை மாவட்ட கலெக்டரும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து வழங்க முயற்சி செய்ய வேண்டும். காலம் கடந்தால் தேர்தல் திருவிழாவின் போது திருப்பு முனை ஏற்படும் என்று கூறினார்.
திமுக ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் இளையராஜா கூறுகையில்: தமிழகத்தில் திமுக ஆட்சி எப்போதெல்லாம் அமைகிறதோ அப்போது தான் பொற்காலம். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த மாவட்டத்திற்கு அறிவித்துள்ள திட்டங்கள் பணிகள் ஏராளம். குறிப்பாக, ஓட்டப்பிடாரம் தொகுதி பின்தங்கிய பகுதியாக இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பின் அரசு கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை, பர்னிச்சர் பூங்கா என்று எண்ணற்ற திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் ஆண்கள் என அனைவருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு வகையில் நன்மைகள் அடைந்திருப்பார்கள். குறிப்பாக, விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி படிப்பு உதவி தொகை என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த காலத்தை திரும்பி பார்த்தால் எதுவுமே நடைபெறாத நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி தொலைநோக்கு பார்வையோடு பணியாற்றி வருகிறார். திமுக ஆட்சி தான் எல்லோருக்குமான சமத்துவ ஆட்சி என்றார்.

