தூத்துக்குடி.
தூத்துக்குடி, மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசின் அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளில் 300 பொது இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஊராட்சி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெறுவது போல் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சி பகுதியில் பகுதிசபா கூட்டம் நடைபெறுகிறது.
அதனடிப்படையில் 15வது வார்டுக்குட்பட்ட மடத்தூர் அங்கன்வாடி மையம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா வரவேற்புரையாற்றினார். அதனை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதில், அப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் எங்;களுக்கு பட்டா வழங்க கோரியும், புதியதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு, உயர்மின் கம்பங்கள் அமைக்க கோரியும், மழைநீர் தேங்காத வண்ணம் பள்ளமான பகுதிகளில் மணல் நிரப்ப வேண்டியும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, உட்பட பல்வேறு மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.
தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்;: தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊராட்சி பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடப்பதை போல் மாநகராட்சி பகுதிகளிலும் இதேபோல் கூட்டங்கள் நடத்தி குறைகளை கேட்டறிந்து அதை தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதற்கிணங்க பகுதி சபா கூட்டம் மட்டுமின்றி ஒவ்வொரு புதன்கிழமையும் 4 மண்டலங்களிலும் குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற்று வருகிறது. இனையதளம், வாட்ஸ்சப் வழியாகவும் வரும் புகார்களையும் குறிப்பெடுத்து கொண்டு அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மக்கள் அளித்துள்ள மனுக்களின் அடிப்படையில் ஏற்கனவே மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் மற்றும் வடிநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பகுதி எப்படி இருந்தது என்பது எல்லாம் இந்த பகுதி மக்களுக்கு நன்கு தெரியும். திமுக ஆட்சி அமைந்த பின் எவ்வளவு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியும். மக்கள் நலன் தான் முக்கியம் என்று நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து பணியாற்றுவோம். இப்பகுதியில் கட்டுப்பட்டு வருகின்ற இஎஸ்ஐ மருத்துவமனை இன்னும் 3 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும். மேலும் தினசரி இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து அடிப்படை பணிகளும் இந்த பகுதிக்கு முழுமையாக செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், உதவி செயற்பொறியாளர் இர்வின்ஜெபராஜ், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாண்டி, குடிநீர் குழாய் ஆய்வாளர் மாரியப்பன், பகுதி சபா உறுப்பினர்கள் சக்திவேல், ஞானபிரகாசம், முத்துவேல் ராஜ், சீனிவாசன், ராஜ்குமார், திமுக வட்ட செயலாளர் பொன் பெருமாள், வட்ட பிரதிநிதிகள் சோமசுந்தரம், இளங்கோவன், கணேசன், இளைஞரணி ராஜா, சுகாதார துறை டாக்டர் ஜால்சி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ் நியூஸ்:
மண்டல கூட்டத்தை மிஞ்சிய பகுதி சபா கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏற்கனவே இந்த பகுதியில் செய்த பணிகளை பாராட்டி மேயர், ஆணையர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். அதே நேரத்தில் குறைகளை சுட்டிக்காட்டி மனுக்களை அளித்து மேயர் ஆணையரிடம் விரிவாக தகவல் பரிமாற்றம் மேற்கொண்ட நிலையில் சிலர் தங்களது செல்போனில் எடுத்து வைத்திருந்த குறைகளையும் சுட்டிக்காட்டி இருவரிடமும் காண்பித்தனர். அனைத்தையும் பொறுமையாக கேட்டறிந்து பார்த்த அவர்கள் அந்த பெண்களிடம் தங்களது தொடர்பு எண்களை இருவருமே பெற்றுக்கொண்டனர். மற்ற பகுதிகளில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தை விட இந்த பகுதி சபா கூட்டம் ஆரம்பம் முதல் கடைசி வரை எல்லோருக்கும் மன மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் அதிகாரிகளும் பொதுமக்களும் இணக்கமாக இருந்தனர்.

