தூத்துக்குடி.
நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் திறப்பு விழா தூத்துக்குடி டூவிபுரத்தில் நடைபெற்றது. மீண்டும் இல்லம் திட்டம் துணை இயக்குநர் கீர்த்தனா ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். தி பேனியன் மருத்துவ இயக்குநர் அன்புதுரை திட்ட விளக்கவுரையாற்றினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு, நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையான உறைவிடம் திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் இந்த மகிழ்வகம் அமையக் கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கனிமொழி எம்.பி.யின் முன்னெடுப்பில் நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் என்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான 20 படுக்கைகள் கொண்ட காப்பகத்தைத் துவக்கி வைத்த பின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாற்றினார். மேலும், பல்வேறு தொழில் வளர்ச்சிக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்து பேசுகையில்: நம்ம தூத்துக்குடியில் மகிழ்வகம், மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் என்ற இந்த திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், பானியன் கார்டன் மற்றும் சோயா தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூத்துக்குடியில் மகிழ்வகம் உருவாக்கியிருக்கும், இந்த நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பல இடங்களில் நடந்துகொண்டு இருப்பதை, உட்கார்ந்திருப்பதை, அலைந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். நமது மனசு ஒரு நிமிடம் அவருக்காக வருத்தப்படுகிறது. ஆனால், கடந்து சென்று விடுவோம். அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்குவது என்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நிறுவனம் தான் பான்யன். இந்தியாவில் பல மாநிலங்களில் மனநிலை ஆரோக்கியக் கொள்கை உருவாக்கிய பான்யன் நிறுவனம்.
ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒரு அறையில் அடைத்து வைத்து இருப்பார்கள், காலில் சங்கிலி கட்டி இருப்பார்கள், அவர்களைப் பற்றிப் பல சோகமான நிலையைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உரிமைகளும், தகுதியும் இல்லை என்ற நிலை உள்ளது. அவர்களும் அத்தனை உரிமைகளும் இருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலகட்டத்தில் தற்போது நின்று கொண்டிருக்கிறோம்.
கலைஞரின் வழியில் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மிகப்பெரிய சேவைகளையும், திட்டங்களையும் உருவாக்கித் தந்திருக்கிறார். மனநிலை ஆரோக்கியம் என்பது இந்த உலகத்தில் மக்கள் இடையே இருக்கக்கூடிய பாகுபாடுகள், இந்தியாவில் உள்ள ஜாதி வேறுபாடுகள் மற்றும் ஆண், பெண் என்ற ஏற்றத்தாழ்வுகள், இது அத்தனையும் மனநிலையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. மனநிலை ஆரோக்கியம் என்பது சில நபர்களுக்கானதாக மட்டும் பார்க்காமல், இது யாவருக்கும் வரக்கூடிய பிரச்சனை. அதை எதிர்கொள்ளும் முதல் படியாக இன்று தூத்துக்குடியில் இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரக் கூடிய நிகழ்வு என்று பேசினார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: நிச்சயம் இதுபோன்ற இல்லம் தூத்துக்குடி தேவையான ஒன்று தான். இதை எல்லோராலும் நடத்த முடியாது. நடத்துவபர்கள் தியாகம், கருணை, பணிவு இருந்தால் தான் முடியும். நான் 2006ல் அமைச்சராக இருந்த காலத்திலேயே தொடங்கப்பட்டு நடைபெற்றது. இப்போது தமிழக முதலமைச்சர் 2022-2023ம் ஆண்டுகளில் இதை முன்னெடுத்து செல்படுத்துவதற்கு அறிவுரை வழங்கி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை முழுமையாக பல்வேறு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் பெற்றோர்கள் குழந்தை பெற்ற காலத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்தை கடக்கும் பொழுது குழந்தையின் செயல்பாடுகள் ஒவ்வொரு செயல்களின் மூலம் நாம் அதை உணர்ந்து கொள்ள வேண்டும், 3 வயதிற்குள் சிறிய குறைபாடுகள் எதுவுவாக இருந்தாலும் முழுமையாக தீர்வு காணலாம். அதேபோல் தூத்துக்குடியில் இதுபோன்று குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சிறப்பு இல்லங்கள் இருக்கின்றன. அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். அரசு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறது.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக அரசின் சார்பில் 1½ வருடத்திற்கு முன்பு இதுபோன்று திருச்செந்தூரில் உருவாக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் வந்து விட்டாலே கடுமையான குளிர்;காலம் ஆகும். ஆனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் குடும்பத்திற்கு செல்லாமல் வேலைகளை முடித்து விட்டு, பஸ்-ஸ்டாண்ட் உள்ளிட்ட பல ஒதுக்குப்புறம்பான இடங்களில் உறங்குகின்றனர். அவர்களில் 150 பேரை நேரில் நான் சந்தித்து கம்பளி போர்வை வழங்கினேன். அவர்கள் சராசரி நம்மை போன்ற மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். என்ன சிறிய குறைபாடு என்றால், தினமும் குளிக்காமல் அழுக்குச் சட்டையுடன் திரிகிறார்கள். அதுபோன்று இருப்பவர்களுக்கும் சில அறிவுரைகளை நாம் வழங்கி இதுபோன்ற இல்லங்களில் இருப்பதற்கு வழிவகை செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது என்று பேசினார்.
மாவட்ட கலெட்டர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வர்யா, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சிவகுமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, தாசில்தார் முரளிதரன், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, வைதேகி, கந்தசாமி, ஜெயசீலி, கனகராஜ், கண்ணன், விஜயக்குமார், பவானி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், அருண்குமார், கவிதாதேவி, அருணாதேவி, கோகுல்நாத், செல்வி, அன்பழகன், பெல்லா, இந்திரா, மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தா, அந்தோணிராஜ், வட்ட செயலாளர்கள் பாலகுருசாமி, செந்தில்குமார், பெருமாள்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் கருணா, மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

