தூத்துக்குடி, ஆக,14
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட மரியாதை ஏற்றுக் கொண்டு முறைப்படி தூத்துக்குடி மாவட்ட 33 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது “தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்தவித பங்கமும் ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். தூத்துக்குடி கடலோர மாவட்டம் என்பதால் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து கடற் பகுதி வழியாக நடைபெறும் பல்வேறு கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் பல ஆண்டுக்கு மேலாக போலீசார் தொடர்ந்து பணியாற்றி
வரும் நிலையில் காவலர்கள் மீது ஏதும் புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை பணியிட மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். புதிய எஸ்பி பொறுப்பேற்றவுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மற்றும் போக்குவரத்து போலீசார் உதவி ஆய்வாளர்கள் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

