கொடைக்கானல்,
கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவர் கோடை வி ஆனந்த் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வதிலை பி செல்வம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், கொடைக்கானல் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீதும், அவர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனபோக்கோடு இருந்து வருவதை கண்டித்தும், தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், வாகன நிறுத்துமிடம் போன்றவற்றை பொதுஏலம் விடாமல் தனிச்சையாக செயல்படுவதால் கொடைக்கானல் நகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றி, பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும். கொடைக்கானல் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடங்களில் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த தவறி வருவதால், ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் புதிய புதிய கடைகள், கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட முன்வரவேண்டும். பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும், அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகள் அத்துமீறல் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் சட்ட விரோத கும்பல்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கொடைக்கானலில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் கொடைக்கானல் சுற்றுலாத்தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுலாபயணிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கு தடையாக உள்ள ‘இ-பாஸ்” நடைமுறையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு அரசு அதிகாரிகள் முதுகெலும்பாக செயல்பட்டால் மட்டுமே முழு வளர்ச்சியை எட்ட முடியும். ஒருசில அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் உலக புகழ்பெற்ற கொடைக்கானல் சுற்றுலாதளம் சுகாதார சீர்கேடு நிறைந்த குப்பை மேடாக காட்சியளிப்பதற்குள் தமிழக அரசும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் மற்றும் கொடைக்கானல் நகர பகுதிகளில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அவலநிலை தொடருமேயானால், தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் பொதுமக்களை ஒன்று திரட்டி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பும், கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வதிலை பி செல்வம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவர் கோடை வி ஆனந்த் பேசியதாவது: கொடைக்கானல் பகுதி மக்கள் அரசு அதிகாரிகள் சிலரின் அலட்சியத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, கொடைக்கானல் நகர போக்குவரத்து போலீசார் லேக் பகுதியில் மட்டுமே நின்று கொண்டு காலை முதல் மாலை வரை வாகன தணிக்கை என்ற பெயரில் வாகனஓட்டிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். பிற பகுதிகளில் கவனம் செலுத்துவது கிடையாது. மேலும், வெளிமாநில வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதனை சீர் செய்ய முறையான திட்டங்கள் வகுக்காமல், அலட்சியமாக செயல்படுவதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக மாறிவருகிறது. போக்குவரத்து காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை நீண்ட வருடங்களாக தொடர்ந்து இந்த போக்குவரத்து காவல்துறையிலேயே பணியாற்றி வருவதால் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட காரணமாகியுள்ளது. ஆகையால், போக்குவரத்து பணிகளில் அலட்சியம் காட்டும் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி, திண்டுக்கல் சரக டிஐஜி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கூட்டத்தில் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தொண்டரணி பொதுச் செயலாளர் இனியன் சம்பத், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சதன் வேட்டையன், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் பெஞ்சமின், மாவட்ட மாணவரணி பொதுச் செயலாளர் பிரேம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுச் செயலாளர் தினேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுதாகர், கொடைக்கானல் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய மகளிரணி செயலாளர் சுசிலாமேரி, ஒன்றிய இளைஞரணி தலைவர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திக், டேவிட், மணி, சிவா, குணா, குமார், நாகேந்திரன், சுரேஷ், மற்றும் கொடைக்கானல், வத்தலக்குண்டு, ஆத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் எபினேசர் கிருபாகரன் நன்றியுரையாற்றினார்.

