கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. என்றாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி என்று கூறப்படுகிறது.
இன்று முகூர்த்த நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஆர்வம் காட்டினார்கள். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் இன்றே மனுதாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்யும்படி தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மதியம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சங்கரநாராயணனிடம் மனுதாக்கல் செய்தார். கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

