தூத்துக்குடி
தூத்துக்குடியில் கடந்த வருடம் வரலாறு காணாத மழை பொழிவினால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். தூத்துக்குடி மாநகருக்குள் வெள்ளநீர் உட்புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
எதிர்பாராத கனமழையினால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, தவித்த வேளையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி திமுகவினர் களமிறக்கப்பட்டனர். அதன்படி, தமிழக முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர், உயரதிகாரிகள், திமுக தலைமை நிர்வாகிகள் உள்பட பலர் தூத்துக்குடிக்கு படையெடுக்க துவங்கினர்.
அமைச்சர்கள் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடி ஆய்வு செய்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு, சேதமடைந்த குளங்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்களை உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டும், தேவையான அடிப்படை உதவிகளையும், அத்தியாவசிய பொருட்களை கொடுத்து மக்களின் துயர்துடைக்க அவர்களுக்கு தோளோடு தோள் கொடுத்து உதவிய அமைச்சர், எம்.பி., மேயர் உள்பட அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. அரசிற்கு உறுதுணையாக பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டு தங்கள் இல்லங்களை மறந்து 24 மணிநேரமும் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றியதில் திமுகவினர்களின் பணி அளப்பறியது.
எதிர்கட்சிகள் என்னதான் தேர்தலை குறி வைத்து நிவாரண உதவிகள் செய்வதாக பேசினாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.6000 நிவாரண உதவி அறிவித்தார். இது வெள்ள பாதிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களின் பாரம் ஓரளவு குறைந்தது.
இந்நிலையில், வெள்ள பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினர்களின் அயராத மக்கள் பணிகளை பாராட்டும் விதமாக தூத்துக்குடி எம்.பி, அமைச்சர், மேயர் ஆகியோர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, தூத்துக்குடி நகர்மன்றத்தில் 1866 முதல் 2008 வரை மொத்தம் 22 நகர்மன்ற தலைவர்கள் பணியாற்றியுள்ளனர். அதில் 21 பேர் ஆண்கள். கடைசியாக 22வது நகர்மன்ற தலைவராக கஸ்தூரி தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக என்.பெரியசாமி பணியாற்றிய காலத்தில், தூத்துக்குடி நகராட்சியாக இருந்த நிலையில் 2008 ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தில் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியால் தூத்துக்குடியில் துவக்கி வைக்கப்பட்டது. உலக பிரசித்திப் பெற்ற பனிமய மாதா திருவிழா அன்று நடைபெற்றது சிறப்பு அம்சமாகும். தூத்துக்குடி மாநகராட்சியின் முதலாவது பெண் மேயராக கஸ்தூரி தங்கத்தை அவரது ஆசனத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி தனது சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்த 111 பவுன் தங்க செயின் கலைஞர் கையால் அணிவிக்கப்பட்டது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 51 கவுன்சிலர்களுக்கும் என்.பெரியசாமி ஒரு பவுன் தங்க மோதிரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து வழங்கினார்.
கட்சியும், கலைஞரும் எனக்கு இரு கண்கள் என்று வாழ்ந்து, முரட்டு பக்தனாக பெயர் பெற்று, கழக பணியாற்றியவர் என்.பெரியசாமி. ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக பணியாற்றி பெருமைக்குரியவராக வாழ்ந்து மறைந்தார்.

பெரியசாமி மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கழகப் பணிகளை அவரது வாரிசுகளான தற்போது வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 6 வருடத்திற்கு மேலாக கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வரும் நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை வெள்ளப் பாதிப்பின் போது அமைச்சர் கீதாஜீவனும், மேயர் ஜெகன் பெரியசாமியும் எல்லா தரப்பினருக்கும் தேவையான உதவிகளை செய்து வந்த போதும் 58 வார்டு பகுதிகளிலும், அனைவருடைய குடும்பத்தினருக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்போடு வழங்கப்பட்டது.
இந்தாண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில், இந்தியா கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியமைக்க வேண்டும். அதற்கு அனைவரும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட வேண்டும் என்ற முனைப்போடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரையேற்று பணியாற்றி வருகிறார். அதற்கு மெருகேற்றும் வகையில் வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் தொண்டர்கள், நிர்வாகிகள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தி அவர்களின் இல்ல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பணியாற்றி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எந்த உதவியாக இருந்தாலும் செய்து வருகிறார். திமுக ஆட்சி அமைந்த பின் தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் சார்பில் குற்றாலத்திற்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்து மகிழ்வித்தார்.
இதனையடுத்து, மேயர் ஜெகன் பெரியசாமி பெண் மாமன்ற உறுப்பினர்களை கொடைக்கானல் இன்ப சுற்றுலா மூலம் குளிர்வித்தார். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தைப் பொங்கல் திருநாளையொட்டி கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி சார்பில் வைட்டமின் சி பாரபட்சமின்றி திமுகவினருக்கு வழங்கப்பட்டது.
மழை வெள்ள பாதிப்பின்போது பணியாற்றிய மாமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சார்ந்த அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் தந்தை வழியில் 1 பவுன் தங்க மோதிரம் வழங்கி, மேலும் உற்சாகப்படுத்தினார்.
இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தேர்தலின் போது பல்வேறு சந்திப்புகளும், அதிரடி ஆஃபர்களும் வழங்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. 2024ம் ஆண்டு தூத்துக்குடி திமுகவினருக்கு ஏறுமுகம் தான்.

