தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இருதினங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள், கடைகள் மூழ்கின. இதில் 49 பேர் மரணமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மாடு, ஆடு, கோழிகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. பலர் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். பல பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் இன்று வரை சீரடையாத நிலையில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு பரிதவித்து வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கண்மாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டும், காட்டாற்று வெள்ளமும் இணைந்து ஒரே நேரத்தில் பாய்ந்து வந்ததால், அதன் கோரத்தாண்டவத்தால் மாப்பிள்ளையூரணி ஊராட்சி முழுவதையுமே புரட்டி போட்டு விட்டது.
இதனையடுத்து கனிமொழி எம்.பி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணப் பொருட்களை அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கியுள்ள நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இப்பகுதியை முழுமையாக மீட்டெடுப்பது குறித்து நடைபெற்ற ஆலோனையின் போது, ராஜகண்ணப்பன் பேசுகையில்: எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்ததால் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதில் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி பல்வேறு கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் முதலமைச்சரும் தூத்துக்குடிக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவராண உதவிகளை வழங்கினார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி முழுவதிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல பகுதிகளில் சிறிய மோட்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பெரிய மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளை முழுமையாக செய்வதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் கிளைச் செயலாளர்களும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். தங்களது பகுதிகளில் என்ன தேவை என்பதை உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள், உணவுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உதவிகளையும் முழுமையாக செய்து கொடுப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது. அதிகாரிகளும் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு விரைவாக மக்கள் சகஜ நிலைக்கு வருவதற்கான பணிகளை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, உதவி அலுவலர்கள் மகேஸ்வரி, தங்க செல்வி, சாந்தி, உதவி செயற்பொறியாளர் பிரான்சிகா, சுகாதார ஆய்வாளர் வில்சன், தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாநில மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர் ராதா லோகேஸ்வரன், மாநில பிரச்சார குழு செயலாளர் ராணி ரவிச்சந்திரன், சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லெட்சுமி வேலு, தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கென்று தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக தண்ணீரை வெளியேற்றும் பணியையும், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் 24 மணி நேரமும் இரவு-பகல் என்று பாராமல் முழுமையாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படி பணிகளை அதிகாரிகளுடன் இணைந்து முழுமையாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.6000 நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் யாரும் விடுபடாத வகையில் கிளைச் செயலாளர்கள் மூலம் டோக்கன் வழங்கிட அப்பணியையும் திறம்பட பணியாற்றி, எல்லா பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.
வெள்ள நீர் புகுந்த நாள் முதல் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முழுமையாக தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.
மேலும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற பகுதிகளில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மாடு, ஆடுகளுக்கும் அரசு அறிவித்த நிவாரண உதவிகளை பெற்றுத் தர வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதற்கான கணக்கெடுப்பு விண்ணப்ப படிவங்களை வழங்கி பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும், அனைத்து பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.
அதிக குக்கிராமங்களை கொண்ட பகுதியில் முழுமையாக அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும் சாலையையும் சீரமைத்து சிறிய குடிசை வீடு முதல் நடுத்தர வீடுகள் வரை பாதிக்கப்பட்டதை முழுமையாக கணக்கெடுத்து நிவாரணங்கள் வழங்க வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாக அனைத்து கட்டமைப்பு பணிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பினரின் ஒட்டுமொத்த குரலாக ஓங்கி ஒலிக்கின்றன.

