தூத்தக்குடி,
தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழகம் முழுவதும் வழங்கி வருகிறது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற ஆரோக்கியபுரத்தில் உள்ள விவிடி மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் கனகரத்தினமணி வரவேற்புரை ஆற்றினார்.
33 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் கல்வித்துறையும், மருத்துவத்துறையும் எனக்கு இரு கண்கள் என்று கருதி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி பள்ளிக் கட்டிடம் மற்றும் கட்டமைப்பு பணிகளையும் முறைப்படுத்தி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். நீங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிளில் வரும்போது உங்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நடைபயிற்சி முக்கியம் என்பதைப்போல் சைக்கிளும் நமக்கு முக்கியமாக விளங்குகிறது. நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். படிக்கும் காலத்திலேயே எதிர்காலத்தில் எந்த இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் பயணிக்க வேண்டும். உங்கள் தாய் தந்தையர் எவ்வளவு சிரமப்பட்டு உங்களை படிக்க வைக்கிறார்கள் என்பதை உணர்ந்து எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் நீதிபதி, பொறியாளர், மருத்துவர் என்ற இலக்கை அடைய வேண்டும். கடமைக்கு படிக்காமல் கடமை உணர்வோடு படித்து முன்னேறி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு படிப்பிலும் அதிக மதிப்பெண் எடுத்து நல்ல பழக்க வழக்க ஒழுக்கத்துடன் வளர வேண்டும். நல்ல ஆரோக்கிய உடலுடன் எல்லா செல்வங்களையும் பெற வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, திமுக ஒன்றிய துணை செயலாளர் கணேசன், பள்ளி உதவி தலைமையாசிரியை மேரிகீதா, பள்ளி தாளாளரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, ஊராட்சிமன்ற உறுப்பினரும் திமுக கிளைசெயலாளருமான பாரதிராஜா, திமுக கிளைசெயலாளர் பிரபாகர், மற்றும் கௌதம் , ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர் ரேவதி நன்றியுரை ஆற்றினார்.

