தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியை சோ்ந்தவா் அரசகுமாா் மகன் ராஜ்குமாா் (46). ராஜஸ்தானில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சாந்தி (42). இரண்டு மகள்கள் உள்ளனா். நேற்று மதியம் 1.45 மணியளவில் தனியாா் எரிவாயு நிறுவனத்தில் இருந்து வருவதாகக் கூறி ராஜ்குமாரின் வீட்டுக்கு வந்த நபா், வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டா் மற்றும் டியூப்பை சா்வீஸ் செய்ய வேண்டுமென கூறியுள்ளாா்.
சா்வீஸ் வேண்டி யாரையும் அழைக்கவில்லை எனவும், சா்வீஸ் வேண்டாம் எனவும் சாந்தி கூறியதையடுத்து அந்த நபா் சென்றுவிட்டாா். சுமாா் அரை மணி நேரம் கழித்து முகமூடி அணிந்து கொண்டு வந்த அதே நபா், வீட்டின் மாடியில் தனியாக இருந்த சாந்தி அணிந்திருந்த 16 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துள்ளான். சுதாரித்த சாந்தி, மா்ம நபரின் மூகமூடியை அகற்ற முயன்றபோது, அந்த நபா் கையில் வைத்திருந்த கத்தியால் சாந்தியின் இடது கையில் வெட்டினாராம்.
பின்னா் அந்த அறையில் இருந்த மேலும் 5 பவுன் தங்கச் சங்கிலியையும் எடுத்துக்கொண்டு, வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்கில் அந்த நபா் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் ஆறுமுகனேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனா். வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.

