தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நடைபெற்ற நகரப்பகுதி உறுப்பினர் தேர்தலில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வில் ஊரக பகுதிக்கு 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் முன்னதாக ஊரகப்பகுதிக்கு மாவட்ட பஞ்சாயத்து 9வது வார்டு உறுப்பினர் அருண்குமார், 10வது வார்டு உறுப்பினர் செல்வகுமார், 1வது வார்டு உறுப்பினர் ஞானகுருசாமி, 4வது வார்டு தங்கமாரியம்மாள், 11வது வார்டு பாலசரஸ்வதி, 2வது வார்டு மிக்கேல் நவமணி, 16வது வார்டு ஜெசி பொன்ராணி ஆகிய 7 பேர் மட்டும் மனு தாக்கல் செய்தனர். இதனால் 7 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நகர்புற பகுதிக்கு 5 உறுப்பினர் பதவிக்கு கயத்தாறு பேரூராட்சி 3வது வார்டு அய்யாத்துரை, கோவில்பட்டி நகராட்சி 21வது வார்டு உலகராணி, தூத்துக்குடி மாநகராட்சி 32வது வார்டு கந்தசாமி, திருச்செந்தூர் நகராட்சி 1வது வார்டு ரமேஷ், விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டு ராமலட்சுமி, சாத்தான்குளம் பேரூராட்சி 4வது வார்டு ஜோசப் ஆகிய 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் 5 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்துஅரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான செந்தில்ராஜ் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி, கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியன், உள்ளிட்ட மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி உறுப்பினர்கள் 414 பேரில் 361 பேர் வாக்களித்தனர்.
பின்னர் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. முடிவில் உலகராணி 351 வாக்குகள், கந்தசாமி 348 வாக்குகள், ரமேஷ் 347 வாக்குகள், ஜோசப் 343 வாக்குகள், அய்யாத்துரை 337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கந்தசாமி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதே போல் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நிகழ்ச்சியின் போது மாநகராட்சி மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மற்றும் மணி, அல்பட், துரை, பாஸ்கர், உள்பட பலர் உடனிருந்தனர்.

