வேதாரணியம் ஏப்ரல் 19
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மூன்றாம்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
வேதாரண்யம் நகராட்சி மூன்றாம் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 15.02.1894 ஆம் ஆண்டு துவங்கப்பெற்று 129 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் பள்ளியாகும். இப்பள்ளியில் இக்கல்வி ஆண்டில் 64 மாணவர்களும், 70 மாணவிகளும் என மொத்தம் 134 மாணவ-மாணவியர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி வழிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒரு 1 வகுப்பறை கட்டடம், ஒரு 3 வகுப்பறை கட்டடம், ஒரு 2 வகுப்பறை கட்டிடம், ஒரு இரண்டு வகுப்பறை கட்டடம் அமைந்திருந்தது. அதில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 2 வகுப்பறை கட்டடம் மற்றும் இரண்டு வகுப்பறை கட்டடம் கடந்த ஆண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, கல்வி பயிலும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 3 இலட்சத்தில் தற்காலிக வகுப்பறை கொட்டகை அமைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.
தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உபரி நிதி வட்டி தொகை பணிகள் 2022-2023 என்ற தலைப்பில் இருந்து ரூபாய் 17.90 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டு புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பணிப்பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இவ்விழாவில் வேதாரண்யம் நகரமன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி இராமச்சந்திரன், வருவாய் கோட்ட அலுவலர் (மு.கூ.பொறுப்பு) வ.மதியழகன், ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் உதயம்.வே.முருகையன், வேதாரண்யம் ஒன்றிய ஆத்ம குழு தலைவர் என்.சதாசிவம், தலைமையாசிரியை க.செந்தமிழ்செல்வி, ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

