தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனடிப்படையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டு பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களிடம் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, வீட்டு மனை பட்டா, பஸ் வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதை கீதாஜீவன் கனிவோடு பெற்றுக் கொண்டு, விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், கவுன்சிலர் ஜெயசீலி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட செயலாளர் செந்தில்குமார், முன்னாள் வட்டச்செயலாளர் மாரியப்பன், மற்றும் அற்புதராஜ், மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

