நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் 159 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 லட்சத்து 27 ஆயிரத்து 853 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம் ஜன 24
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் உள்ள கிராம நிருவாக அலுவலகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை வி.பி.மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்துகொள்ள ஏதுவாக நடத்தப்படுவது மக்கள் நேர்காணல் முகாமாகும்.
இம்முகாமின் நோக்கம் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதாகும். தகுதியின் அடிப்படையில் நலத்திட்டங்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது. நம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சுமார் 1,752 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் தொடர்பான கடந்த ஓன்றரை ஆண்டுகளில் 16 நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுதல், 4 கோடி மதிப்பீட்டில் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேம்படுத்துதல், புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுதல், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், கிராம சேவை மைய அலுவலக கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடம் போன்ற கட்டிடங்களை புதியதாக கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் இந்த குறிச்சி ஊராட்சியில் வீட்டிற்கு வீடு கழிப்பறை என்ற திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதால், இந்த ஊராட்சியானது தூய்மை கிராம விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், நம் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தினை குறைப்பதற்கு பெற்றோர்கள் முன் வர வேண்டும். குழந்தைகள் மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவது, புகைபிடித்தல் குட்கா போன்ற தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதை பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை உரிய வழியில் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய் துறை சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.17,60,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளையும்,சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 என 12 மாதத்திற்கு ரூ.4,80,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.55,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.5,453 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.2,400 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.22,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டி, சமூக நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3,000 மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் என மொத்தம் 159 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 இலட்சத்து 27 ஆயிரத்து 853 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் க.பா.அருளரசு, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி
டிவிக்காக
நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

