தூத்துக்குடி ஆகஸ்ட் 15
நாடு விடுதலை அடைந்த 75 ஆம் ஆண்டை முன்னிட்டு எழு கடற்றுரை மாமன்னர் கல்லறையில் தேசப்பற்றாளர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
குமரி முதல் இராமேஸ்வரம் வரை வாழ்ந்த பரதவர்களின் 16வது மாமன்னராக வாழ்ந்தவர் தெக் குருஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன். இம்மன்னின் கப்பலில் தான் வீரபாண்டிய கட்டபொம்மு பல முறை கடல்வழிப்பயணம் மேற்கொண்டார்.
சிறையில் இருந்து தப்பி வந்த ஊமைத்துரையைத் தனக்குச் சொந்தமான பாண்டியன் தீவில் வைத்து பாதுகாத்தவர் இம்மன்னரே.
கடல் குடியில் நடந்த புரட்சிப்படைக்கான ரகசிய கூட்டத்தில் இப்பரத குல மன்னர் கலந்து கொண்டார். இப்பரதகுல மன்னர் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டே புரட்சிப்படையைச் சார்ந்த ஊமைத்துரை, மருதுபாண்டிய சகோதரர்கள் இராக்கெட் உள்ளிட்ட ஆயுதங்களை உருவாக்கிப் போரிட்டனர்.
விடுதலைப்போருக்கு ஆயுதங்களும் போர்வீரர்களும் வழங்கி உதவிய இம்மன்னர்தான் பனிமய மாதா பேராலயத்திற்கான தங்கத் தேரை உருவாக்கித் தந்துள்ளார். அதனால் இவரை மக்கள் தேர்மாறன் என்று அழைத்தனர்.

தூத்துக்குடியை ஆண்ட டச்சுப் படையையும், ஆங்கிலேயரையும் எதிர்த்துப் போரிட்ட பரதகுல இம்மன்னரின் கல்லறை தூத்துக்குடி லசால் பள்ளி மைதானத்தில் உள்ளது. நாட்டின் விடுதலை நாள் விழாவை முன்னிட்டு இம்மண்ணின் பூர்வக்குடிகளும் தேசப்பற்றாளர்களும் ஒன்றுகூடி இம்மாமன்னரின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்தி, விடுதலை விழாவைக் கொண்டாடினர்.
இந்நிகழ்விற்கான எற்பாடுகளை குரூஸ் பர்னாந்திஸ் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹெர்மென் கில்டு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஹெர்மென் கில்ட், எழுத்தாளர் நெய்தல் அண்டோ, எட்வின் பாண்டியன், சசிகுமார், தினேஷ், கல்யாணசுந்தரம், அமலன், டெரன்ஸ், வர்கீஸ், வளன், சேவியர் சில்வா, ஜுடு, ஜெயக்குமார், லூர்துசாமி, ஸ்பெல்மென், அலாய், ரோமால்ட், டென்சிங் , கென்னடி, ஜஸ்டின், சகாயராஜ், பெணோ உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

